முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஸ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், வழக்கு விசாரணைக்கு வேறொரு திகதியை வழங்குமாறும் நீதிமன்றில் கோரினார்.
சமர்ப்பிப்புகளை கருத்திற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 20 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த கடற்படை அதிகாரிகள் உட்பட சாட்சிகளை அடுத்த திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தினார்.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் அமைந்துள்ள 73 மில்லியன் ரூபா பெறுமதியான 5 காணிகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.