டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் பல தவறான விளக்கங்கள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர், டிஜிட்டல் சேவையை வழங்கும் போது, வெளிநாடுகளில் இருந்து சேவை வழங்குவோருக்கு தொகையின் ஒரு பகுதியிலும், உள்நாட்டில் சேவை வழங்குவோருக்கு முழுத் தொகையிலும் வரி அறவிடப்படுவதாக சில தவறான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறான அளவுகோல் எதுவும் இல்லை எனவும், அவர்கள் வழங்கும் சேவையின் பெறுமதி நுகர்வோரை சென்றடையும் போது மட்டுமே வரிவிதிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும், அரசாங்கத்தின் சார்பில் அந்த சேவைக்கு வரி அறவிடுவதற்காக மட்டுமே பதிவு செய்யப்படுவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பதிவு செய்தவுடன், சம்பந்தப்பட்ட சேவையை வழங்கிய நிறுவனத்தின் விலைப்பட்டியல் மதிப்புக்கு வரி விதிக்கப்படும் என்றும், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மென்பொருள் சேவைகளுக்கு வரி கிடையாது எனவும், டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி வழங்கப்படும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு புதிய வரிகள் விதிக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வழங்கப்படும் சேவைகளை டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி வரிகளில் உள்வாங்குவதன் மூலம் உள்ளூர் நிறுவனங்களுக்கு சமமான நிலை மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்