ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக விசாரணை இன்று (24) நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் ஜூன் 18ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதித்துறை சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் என்பவற்றை அரசியலமைப்பு ஒரு உரிமையாக அங்கீகரித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
மிகக் குறைந்த சூழ்நிலையில் மட்டுமே இந்த சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது என்பது நியாயமான அடிப்படையின்றி நபர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை அர்த்தப்படுத்தாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு விசாரணைக்காகவும் தமது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, குறித்த விசாரணையில் எந்தவொரு சாட்சியிடமும் தாம் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
பிரதிவாதிகள் எந்தவொரு நியாயமான அடிப்படையும் இன்றி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் வாடிக்கையாளருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையை பெற்றுக்கொண்டதாகவும், விசாரணை முகமைகள் எவ்வித அடிப்படையுமின்றி அவரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டால் அவருக்கு பிணை வழங்குவதற்கான சுதந்திரம் பறிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அதன் காரணமாகவே மனுதாரர் இந்த நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும், பின்னர் மனு மீதான பரிசீலனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்