டெங்கு நோயாளர்கள் தொடர்பான தகவல்களை கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக குழுக்களுக்கு வழங்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது.
அதன்படி, அந்தத் தகவலின் அடிப்படையில், நோயாளர்கள் தங்கியுள்ள பகுதிகளை தொடர்ச்சியாக துப்பரவு செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த பிரிவு தெரிவிக்கின்றது.
இதுவரை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு மட்டுமே தகவல் வழங்கப்பட்டதாகவும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுற்றுப்புறங்களை தொடர்ச்சியாக சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால் நோயாளர்களின் தகவலின் அடிப்படையில் உரிய துப்புரவு பணிகளை மேற்கொள்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
கிராம சேவை உத்தியோகத்தர்கள் வாரத்திற்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட கிராமத்தின் பிரதேச செயலகத்திற்கும், பொது சுகாதார பரிசோதகர்கள் தாங்கள் இணைக்கப்பட்டுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கும் சுத்தப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால வேலைத்திட்டமாக இந்த நுளம்பு ஒழிப்பு செயற்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்