வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் புறக்காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் கடமைக்கு லாயக்கற்ற முறையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்காக அவரை பணி இடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 23ஆம் திகதி வத்துப்பிட்டிவளை முதலீட்டு வலய பொலிஸ் புறக்காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சீருடையில் கடமைக்கு லாயக்கற்ற முறையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களுடன் வாய் தகராறில் ஈடுபட்ட சம்பவமொன்று வத்துப்பிட்டிவளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு முன்பாக கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அதிகாரியின் செயற்பாடுகள் இலங்கை பொலிஸாருக்கும் முழு அரச சேவைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாலும், ஏனைய அதிகாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாலும், தொடர்ந்தும் சேவையாற்றினால் பொலிஸ் சேவையின் நற்பெயருக்கும், கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படும் என்பதாலும், குறித்த உத்தியோகத்தர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.