இலங்கையர்களுக்கு இந்திய விசாக்களை விரைவாகவும் இலகுவாகவும் வழங்குவதற்கு தற்போதுள்ள கொள்கையின்படி செயற்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையர்களும் இந்தியா செல்வதற்கு இலத்திரனியல் வீசாவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இலங்கையர்கள் இணையத்தில் விண்ணப்பித்து கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய தூதரக விண்ணப்ப நிலையங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பௌத்த விகாரைகள் உட்பட புனித யாத்திரைகளுக்காக இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு விசா வசதிகள் உடனடியாக வழங்கப்படும் என்றும், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு இலவச விசா வழங்கும் முறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
வீசா சேவை வழங்குனரின் மாற்றம் காரணமாக குறுகிய காலத்திற்கு இந்த முறை இடைநிறுத்தப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி முதல் புதிய சேவை வழங்குனர் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலவச வீசா வழங்கும் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.