ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதில் லஞ்சம் பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க திகதி வழங்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரி நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
அப்போது, தொழிலதிபர் நிமல் பெரேரா சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதார முஹந்திரம், நீதிமன்றில் ஆஜராக அனுமதி கோரியிருந்ததுடன், குறித்த நபர் சந்தேகநபராக பெயரிடப்படாததால், வாதத்தை முன்வைப்பது தேவையற்றது என நீதவான் இதன்போது தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கை ஒக்டோபர் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறைந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இந்தச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டதுடன், அவர் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க இரண்டாவது சந்தேகநபராகவும், ஷமிந்திர ராஜபக்ச மூன்றாவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோரி நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்தது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்