வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் 190 பில்லியன் ரூபாவை வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெப்ரி மொஹமட் என்பவரை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதாரகம முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து வருவதாகவும், 190 பில்லியன் ரூபா சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா தெரிவித்தார்.
சந்தேக நபர் ஏ.ஒய் என்ற நிறுவனத்தின் ஊடாக அமெரிக்க டொலர்களில் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார். 'டெலிகிராபிக் டிரான்ஸ்ஃபர்' முறையில் கொழும்பு கோட்டையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் இவ்வாறு நாட்டின் பணம் வெளிநாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட போதிலும், சந்தேக நபர் வரவு வைக்கப்பட்ட பணத்திற்காக ஒருபோதும் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யவில்லை என அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த பணம் எவ்வாறு சம்பாதித்தது அல்லது எதற்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியுள்ளார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தை சந்தேக நபர் தனது பெயரில் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார் எனவும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், நிபந்தனைகளுடன் தனது வாடிக்கையாளரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பிரதான நீதவான் பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்