சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைப் பெற்ற அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களைக் கோரி ஜூலை 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பை சிறிலங்கா காவல்துறை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் வெளியிடப்பட்டதால், கிராமப்புற சமூகங்கள் கடுமையான துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகும் அபாயம் உள்ளதாக கட்சி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையின் 'பொது நோக்கத்திற்கான அறிக்கை'யை மேற்கோள்காட்டி, ஐ.தே.க, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, சட்டத்தை மீறுபவர்களை நீதியின் முன் நிறுத்துவது மற்றும் அமைதியைப் பேணுவது பொலிசாரின் முதன்மைப் பங்கு என்று குறிப்பிட்டது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்த அடிப்படைக் கோட்பாட்டை மீறுவதாக அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐ.தே.க வெளியிட்டுள்ள அறிக்கையில், தெளிவான சட்டபூர்வமான வருமானம் இன்றி பெறப்பட்ட சொத்துக்கள் என்ன என்பதை தீர்மானிக்க வரையறுக்கப்பட்ட பொறிமுறை எதுவும் இல்லை என்றும், இது பொதுமக்களை துன்புறுத்தும் கருவியாக எளிதாக மாற்றிவிடும் என்றும் எச்சரித்துள்ளது.