இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, நேர்மை என்பது அனைத்து பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு தரம் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த பண்பை சிறு வயதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் உள்ள அனைவரும் இந்த பழக்கத்தை கடைப்பிடித்தால், நாட்டை அபிவிருத்தி செய்வது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
இந்த நேர்மையானது முதலில் அரச ஊழியர்கள் மத்தியில் முன்னுதாரணமாகத் தொடங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய பணிப்பாளர் நாயகம், அரச ஊழியர்களே தம்மிடம் உள்ள தவறான எண்ணங்களையும் எதிர்மறையான முத்திரைகளையும் அகற்றும் திறன் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி செயற்படும் 100% சுயாதீனமான அமைப்பாகும் என்பதை வலியுறுத்தும் ரங்க திஸாநாயக்க, நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுவதாக மேலும் குறிப்பிட்டார்.