நாட்டின் சிறைச்சாலைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அவர்களின் உண்மையான கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், எனவே அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தை வினைத்திறனாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று (24) காலை புதிய பூகொட நீதிமன்ற வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் வீட்டுக் காவல் போன்ற தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நீதிபதிகள் நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு வழக்குகளை விரைந்து தீர்ப்பது என்பது நீதித்துறையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.