நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், நீதிமன்றங்களில் தற்போது குவிந்துள்ள பாரிய வழக்குகளை விரைவாக தீர்த்து வைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (21) வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், இந்த நடவடிக்கையின் மூலம் நீதித்துறை மற்றும் சட்ட முறைமைகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பான விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான பரிந்துரைகளை சேகரிப்பதற்காக நாடாளுமன்றக் குழுவொன்றும் முன்னர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீதித்துறையில் இருந்து பொதுமக்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவையை உறுதி செய்வதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை குறிப்பாக கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் எடுத்துரைத்தார்.
புதிய நீதிபதிகளை உள்வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதிகள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதி வரை அனைத்து நிலைகளிலும் ஓய்வூதிய வயது வரம்பை உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தற்போது தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.