தற்பொழுது யாக பருவ அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமாநாயக்க விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக களஞ்சியசாலைகளில் உள்ள நெல் கையிருப்புகளை காலி செய்து புதிய நெல்லை கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை சதொச நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, இந்த வருடத்தின் யாலப் பருவத்தில் சுமார் 475,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு காலநிலை மாற்றங்களினால் நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் இதன் விளைவாக வெற்றிகரமான நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்வனவுக்காக திறைசேரியிலிருந்து 6 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10 பில்லியன் அரசாங்க வங்கிகளால் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வசதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொண்டுள்ளதாகவும், மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்